நவ. 18, 2025 - வட அமெரிக்கத் தமிழர் உறவுகளுக்கு அழைப்பு மடல் !
வட அமெரிக்கத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் (North American Thamizh National Association, Inc.) இணைய அன்பான அழைப்பு!
தமிழ்த்தேசியக் கொள்கை - புதியதோர் எழுச்சி!
அன்பார்ந்த வட அமெரிக்கத் தமிழர்களே, உறவுகளே,
வணக்கம் !
அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் வாழும் முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ்ப் பெருந்தகைகள் இணைந்து, நமது தமிழ்த்தேசியம் (Thamizh Nationalism) என்னும் உயரிய கொள்கை கோட்பாடு ஆகியவற்றை முன்னெடுக்கவும் அதன் விழுமியங்களைப் பேணிப் பாதுகாக்கவும், வட அமெரிக்கத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு (North American Thamizh National Association, Inc.) எனும் அமைப்பை நிறுவியுள்ளனர். வட அமெரிக்காவிலும், உலகின் மற்ற பகுதிகளிலும் வாழும் தமிழர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து, தமிழ்த்தேசியத்தின் இன்றியமையாத் தேவையை உணர்த்தி, தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்து வெற்றிபெறச் செய்வது இவ்வமைப்பின் தலையாயக் குறிக்கோள். இவ்வமைப்பை, சுருக்கமாக 'தமிழர் கூட்டமைப்பு' என்று தமிழிலும், NATNA (நேட்னா) என்று ஆங்கிலத்திலும் அழைக்கலாம். இவ்வமைப்பு, இலாப நோக்கமற்ற அமைப்பாக அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வமைப்பின் அனைத்து நிகழ்ச்சிகளும் செயல்பாடுகளும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அனைத்துச் சட்டங்களுக்கும் உட்பட்டு நடைபெறும் என்று உறுதியளிக்கின்றோம்.
நீண்ட நெடுங்காலமாக, தொடர்ச்சியான நிலப் பகுதியில், ஒரு பொது மொழி, பொதுப் பொருளியல், பொதுப் பண்பாடு, அப்பண்பாட்டில் உருவான உளவியல் உருவாக்கம்,மரபுவழிபட்ட வாழ்க்கை ஆகியவற்றைக் கொண்டு வரலாற்றில் நிலைத்துவிட்ட ஒரு சமூகம் ஒரு தேசமாக அமைகிறது. இந்த வரையறைக்கு ஏற்ப, தமிழ் நாடு, தமிழ் ஈழம் ஆகியவை தேசங்கள் ஆகும். இந்தியாவில் பல தேசிய இனங்கள் உள்ளன. திராவிட நாடு என்பது தேசம் அல்ல; அது கற்பனை ! இந்தியனும் திராவிடனும் இனங்களல்ல; இட்டுக் கட்டப்பட்டவையே!
நமது மொழி தமிழ்; நமது இனமும் தமிழ்; தமிழ் நாடு, தமிழ் ஈழம் என இரண்டு தேசங்கள் தமிழர்களுக்கு உள்ளன; இந்த இரண்டு தேசங்களுக்கும் இறையாண்மை உண்டு -- இவை அனைத்தையும் உள்ளடக்கியது தான் தமிழ்த்தேசியம்.
ஏன் தமிழர் கூட்டமைப்பு? எதற்காக இந்த முன்னெடுப்பு?
தமிழர் அடையாளம், மற்றும் ஒற்றுமை: கல்வி, பண்பாட்டுப் பரிமாற்றம், கூட்டுச்செயல்பாடுகள் வழியாகத் தமிழரின் தனித்துவமான அடையாளம், ஒற்றுமை போன்றவற்றை வட அமெரிக்காவிலும், உலகெங்கிலும் வலிமைப்படுத்துதல்.
தன்னாட்சி, மற்றும் இறையாண்மைக் கொள்கை: தமிழர்கள் பெருமிதத்துடன் வாழ, தமிழர்களின் தாயகங்களான தமிழ்நாடு தமிழீழம் ஆகியவைகளின் தன்னாட்சி உரிமையையும் இறையாண்மையையும் மீட்டெடுக்கும் அடிப்படைக் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லுதல்.
இளம் தலைமுறையினருக்கான கல்விப்பணி: புலம்பெயர்ந்து வாழும் நம் தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழரின் வரலாற்றைக் கற்பித்தல். மேலும் அறம், வீரம், மானம், ஒழுக்கம், கொடை, விருந்தோம்பல், உயிர்மநேயம் உள்ளிட்ட உயர் தமிழ் மரபுக் கூறுகளைக் கற்பித்தல்.
தமிழ்த்தேசிய அரசியல் விழிப்புணர்வு: இளம் தலைமுறைக்குத் தமிழர் இறையாண்மையின் தேவையையும், தமிழர்களுக்குத் தனி அரசு ஏன் இன்றியமையாதது எனும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி, இனப்பற்று, மொழிப்பற்று மிக்க நன்மாந்தர்களாக வளர்த்தெடுத்தல்.
பண்பாட்டைக் கொண்டாடுதல்: பெருமைமிகு தமிழர் பண்பாட்டைத் தங்குதடையின்றி உலகமெலாம் கொண்டு செல்லுதல்.
வரலாற்றுச் சிறப்புமிக்கத் தொடக்கம்:
தமிழ்நாடு நாளான நவம்பர் 01 அன்று, நம் அருமைப் பாட்டன் இராசஇராச சோழன் தோன்றிய திருநாளிலும், இந்த அமைப்பின் தொடக்கவிழா நிகழ்ந்தது, இதன் நோக்கத்திற்கு மேலும் வலிமை சேர்க்கிறது.
வாருங்கள்! இணைந்து செயலாற்றுவோம் !
அமெரிக்கக் கண்டத்தில் வாழும் தமிழ் உறவுகளாகிய நாம் அனைவரும் குடும்பம் குடும்பமாக, இந்தத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இணைவதன் மூலம், அமைப்பை மேலும் வலிமைப்படுத்தி, ஒற்றுமையுடன் செயல்பட்டு, தமிழர்கள் வளமும் நலமும் பெற உதவ வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
உங்கள் பங்களிப்பு, உங்கள் எண்ணங்கள், உங்கள் செயல்பாடுகள் ஆகியவை மட்டுமே தமிழரின் ஓர் உயிர்த்துடிப்புள்ள எதிர்காலத்தைக் கட்டமைக்க உதவும்.
தமிழர் நலன் காக்க இணைந்து கொள்ளுங்கள்!
தமிழர் கூட்டமைப்பின் (NATNA) குறிக்கோள், நோக்கம், தொலைநோக்கு போன்ற விரிவான தகவல்கள் அமைப்பின் இணையதளத்தில் ( www.TheNATNA.org ) உள்ளன.
அமைப்பில் உறுப்பினராக இணைவதற்கு https://www.thenatna.org/Membership இணைப்பைச் சொடுக்கவும்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் பெரும் நற்பணியில் இணைந்து செயலாற்ற தங்களின் உறவினர்களையும் நண்பர்களையும் உங்களுடன் அழைத்துவாருங்கள்.
அன்புடன்,
முனைவர் தணி குமார் சேரன், PhD, MBA
தலைவர், வட அமெரிக்கத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு