ஏப். 05, 2026 - வட அமெரிக்கத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் -வாசிங்டன் டி.சி. தீர்மானங்கள் 2026
ஏப்பிரல் 05, 2026 | வாசிங்டன் டி.சி., அமெரிக்காவட அமெரிக்கத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு - முதல் மாநாடுவாசிங்டன், டி.சி. தீர்மானங்கள் - 2026NORTH AMERICAN THAMIZH NATIONAL ASSOCIATION, INC. - First Annual ConventionWashington, DC Resolutions - 20261. தமிழ் மொழி காக்க, தமிழ் இனம் காக்க, தமிழர் தாயகம் காக்க, தமிழரின் உரிமைகளை மீட்டெடுக்க, தமது இன்னுயிரை ஈகம் செய்த வீரமறவர்களுக்கு, வட அமெரிக்கத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு (North American Thamizh National Association, Inc.) வீரவணக்கம் செலுத்துகிறது. 2. தமிழரின் மொழி தமிழ்; தமிழரின் இனமும் தமிழ்; தமிழர்க்கு தமிழ்நாடு, தமிழீழம் என இரண்டு தாயகங்கள் உண்டு; இவ்விரண்டு தாயகங்களுக்கும் வரலாற்று அடிப்படையிலான இறையாண்மை உண்டு. (க) ஆங்கிலேய ஆட்சியாளர்களிடம் இருந்து, பலமொழிகள் பேசும் பல தேசிய இனங்களை உள்ளடக்கிய இந்தியத் துணைக்கண்டத்தின் விடுதலையை முன்னெடுத்த காங்கிரசுக் கட்சியின் அனைத்து மாநாடுகளிலும், "விடுதலை பெற்ற இந்தியாவில், மொழியின் அடிப்படையில் மொழிவாரி அரசுகள் அமைக்கப்படும்; பாதுகாப்பு, வெளியுறவு, நாணயம், ஊள்நாட்டுத்தொடர்பு ஆகிய நான்கு துறைகள் மட்டுமே இந்தியக் கூட்டாட்சி அரசுக்கு (Federal Government of India) வழங்கப்படும்; மற்ற அனைத்து அதிகாரங்களும் அந்தந்த மொழிவழித் தேசியஇன அரசுகளின் முழு உரிமை" என்பதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், விடுதலை அடைந்தபின், மொழிவழித் தேசியஇன மக்களுக்குத் துரோகம் இழைக்கப்பட்டு, அவர்கள் காலங்காலமாக அனுபவித்த உரிமைகள் மறுக்கப்பட்டு ஏமாற்றப்பட்டனர். 1950 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு இன்று நடைமுறையில் உள்ள இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் கூட்டாட்சிபோல் தோன்றினாலும், உண்மையில் அஃது ஒற்றை ஆட்சியே. அனைத்து அதிகாரங்களும் இந்திய ஒன்றியத்திடம் குவிந்து கிடக்கின்றன. இறையாண்மைப் பகிர்வின் அடிப்படையில் அனைத்து மொழிவழித் தேசியஇனங்களுக்கும் சம உரிமைகள் இருக்கும்படி இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தை மாற்றியமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். பல மொழிகள் கொண்ட சுவிட்சர்லாந்து நாடு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. விடுதலைக்கு முன்பு உறுதியளிக்கப்பட்டதுபோல, இந்தியக் கூட்டாட்சி அரசிடம் பாதுகாப்பு, வெளியுறவு, நாணயம், உள்நாட்டுத்தொடர்பு ஆகிய நான்கு துறைகள் மட்டுமே இருக்கவேண்டும், மற்ற அனைத்து அதிகாரங்களும் அந்தந்த மொழிவழித் தேசியஇன அரசுகளிடமே இருக்க வேண்டும். இதற்கு ஏற்ப, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றி அமைத்து, தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மொழிவழித் தேசியஇனங்களின் இறையாண்மையை உறுதிசெய்ய வேண்டும். (உ) 1976 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில், தனித் தமிழீழ அரசை அங்கீகரித்து தமிழீழத்தின் இறையாண்மையை உறுதி செய்ய வேண்டும்.தமிழ்த்தேசியத்தின் உயர் விழுமியக் கொள்கைகளை தமிழர் அனைவருக்கும் கொண்டுசேர்த்து தமிழ்த்தேசியத்தை வெற்றியடையச் செய்யவேண்டும். தமிழ் இனம் எல்லா உரிமைகளும் வளங்களும் பெற்று செழித்தோங்கி வாழ வேண்டுமாயின், தமிழர் தாயகங்களில் தமிழ்த்தேசியத்தை வளர்த்தெடுத்து வெற்றிபெறச் செய்வது காலத்தின் கட்டாயம். இதற்காகவே, வட அமெரிக்கத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து செயல்படும். 3. தமிழீழம் ஒரு தனிநாடாக இருப்பதற்கு அனைத்து உரிமைகளும் உண்டு. தமிழ்நாடு சட்டப் பேரவையில் மார்ச்சு 27, 2013 அன்று “இலங்கை நாட்டை ‘நட்பு நாடு’ என்று சொல்வதை இந்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்; இலங்கை இறுதிப் போரின்போது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் குறித்துத் தற்சார்பான பன்னாட்டுப் புலன்விசாரணை நடத்திடவும்; அதன் அடிப்படையில், போர்க்குற்றத்தில் ஈடுபட்டோரைப் பன்னாட்டு நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தப்பட்டு உரிய தண்டனை பெற்றுத்தந்திடவும்; தமிழர் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு நிறுத்தும் வரை இலங்கை நாட்டின் மீது பொருளாதாரத்தடை விதித்திடவும்; ஈழத் தமிழரின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு 'தனி ஈழம்’ குறித்து இலங்கைவாழ் தமிழரிடமும், இலங்கையில் இருந்து இடம் பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழரிடமும் பொதுவாக்கெடுப்பு நடத்திடவும், ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்புக்குக் குழுவில் தீர்மானத்தினைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தமிழ்நாடு சட்டப் பேரவை இந்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது” என்ற வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள அனைத்தையும் மீண்டும் வலியுறுத்துவதுடன், இந்தத் தீர்மானங்களை இயற்றிய தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இந்த மாநாடு தனது பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது. தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானங்களைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் தமிழீழம் தனிநாடாக மலர வேண்டும் எனவும், ஈழத்தமிழர் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் எனவும் தங்களுடைய தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிடுவதுடன், இவற்றைத் தமிழ்நாட்டு மக்களிடம் எடுத்துச் சென்று ஆதரவு திரட்ட வேண்டும் என வலியுறுத்துகிறது.4. கல்வி, வேலைவாய்ப்பு, சமூக வளர்ச்சித்திட்டங்கள் போன்றவைகளைச் சரியான சமூகநீதி அடிப்படையில் மக்களுக்குப் பகிர்ந்து அளிப்பது இன்றியமையாதது. இதற்கேற்ப கர்நாடகம், தெலுங்கானா, பீகார், குசராத்து போன்ற மொழிவழி அரசுகளால் குடிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு் செய்யப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது போல, தமிழ்நாட்டிலும் குடிவாரிக் கணக்கெடுப்பை மேலும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடத்தி உண்மையான சமூகநீதியை நிலைநாட்டவும்; தமிழ்நாட்டில் வாழும் மொழிச் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படுவது போலவே, மற்ற மாநிலங்களில் வாழும் தமிழரின் உரிமைகளும் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவும் தமிழ்நாட்டு அரசை வலியுறுத்துகிறது. 5. தமிழ்நாடு இப்பொழுது அயலாரின் வேட்டைக்காடாக மாறிவிட்டது. இதைத் தடுத்து நிறுத்தாவிடின், தமிழரின் தாயகமாகத் தமிழ்நாடு இருக்காது. நாகாலாந்து, அருணாச்சலப்பிரதேசம், மிசோரம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் உள்ளதுபோல், தமிழ்நாட்டு அரசுக்கும் வெளி மாநிலத்தவர் உள்நுழையும் அனுமதி (Inner Line Permit) வழங்கும் அதிகாரம் வேண்டும்; தமிழ்நாட்டில் வழங்கப்படும் ஒன்றிய அரசு, தமிழ்நாடு அரசு, தனியார் நிறுவன வேலைகள் அனைத்திலும் 95 விழுக்காடு தமிழர்க்கு மட்டுமே என்று சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்த வேண்டும்; அதிலும் அரசுப் பள்ளிகளில் தமிழ்வழிக்கல்வி கற்றவர்க்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என வலியுறுத்துகிறது. 6. தெலுங்கு மாநிலங்களில் வாழ்வோர் தெலுங்கராகத்தான் உள்ளனர்; "தெலுங்கு தேசம் கட்சி" எனும் கட்சிதான் பல ஆண்டுகளாக ஆந்திராவில் ஆட்சியில் கோலோச்சுகிறது. "நாங்கள் கன்னடர், திராவிடர் அல்லர்" என்று கர்நாடகத்தின் முதலமைச்சர் உயர்திரு. சித்தாராமையா வெளிப்படையாகக் கூறியுள்ளார். அதேபோல், "நாங்கள் மலையாளி, திராவிடர் அல்லர்" என்று கேரளாவின் மறைந்த மேனாள் முதல்வர் உம்மன் சாண்டி கூறினார். ஆனால், தமிழரின் இயற்கையான தமிழின அடையாளத்தை மறைத்து, திராவிடர் எனும் கற்பனையான இன மறைப்புச் சொல்லாடலைப் பயன்படுத்துவதை வட அமெரிக்கத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது. 7. தமிழர் யாரும் திராவிடர் அல்லர். குசராத்து, மகாராட்டிரம், கன்னடம், தெலுங்கு, தமிழ் (அப்போது மலையாளம் கிடையாது) ஆகிய ஐந்து பகுதிகளுக்கும் வடநாட்டிலிருந்து தெற்கே வந்த பிராமணர்களுக்குத்தான் "பஞ்ச திராவிடர்" என்று பெயர். ஆனால், இந்த உண்மைகளையெல்லாம் திட்டமிட்டு மறைத்து, தமிழ்நாட்டின் பூர்வ குடிகளின்மேல் இல்லாத திராவிடத்தைச் சுமத்தி, பொய்ப்புனைவுகள் மூலம் நம்மை நம்பவைத்து, கடந்த 85 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழினப்பகைவர் ஏமாற்றி வந்துள்ளனர். தமிழரின் தாயகமான தமிழ்நாட்டைக் கலப்பின மண்டலமாக மாற்றி தமிழரை அயலார் ஆள்வதற்காக உருவான இன மறைப்புக் கருத்தியலே திராவிடம்! இந்த உண்மைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம். கடந்த 55 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழர் மீது ஆதிக்கம் செலுத்தி ஆண்டுகொண்டிருக்கும் திராவிடம் எனும் கொடிய நஞ்சை தமிழ்நாட்டிலிருந்து அறவே நீக்கித் துடைத்து எறிய வேண்டும் என்று வலியுறுத்துகிறது.8. மொழிவாரி மாநிலங்கள் இந்தியாவில் அமைக்கப்பட்ட பின்பு, அந்தந்த மாநிலத்தின் சொந்த மொழியினர் / இனத்தினர் மட்டும்தான் ஆட்சியில் இருந்து வருகின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும், தமிழர் அல்லாதார் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துகொண்டு தமிழர் மீது அதிகாரம் செலுத்தும் கொடுமை நடைபெறுகிறது. இந்தக் கொடுமையை ஒரேயடியாகத் துடைத்து எறியவேண்டிய முதன்மையான இனக்கடமை தமிழர் அனைவர்க்கும் உண்டு என்று அறிவுறுத்துகிறது. 9. மதுவும், போதைப் பொருட்களும் எவ்விதத் தடையுமின்றிப் பள்ளிச் சிறுவர், சிறுமியர் உட்பட அனைத்துத் தரப்பு மக்களிடமும் கிடைக்கும் வகையில் செய்து, இந்தக் கொடிய பழக்கத்தைத் தமிழ்நாட்டுக்குக் கொடையளித்து, தமிழரைச் சீரழித்த பெருமை திராவிடத்தையே சாரும்! இதை ஒழித்தே தீர வேண்டும். இதற்குப் படிப்படியாகத் தடை விதித்து, முற்றிலும் ஒழிக்க வேண்டும். இடைக்கால மாற்றாக, கள் விற்பனையை அனுமதித்தாலோ, தமிழ்நாட்டு அரசே எடுத்து நடத்தினாலோ உழவர்களுக்கும் பயனளிக்கும், உள்ளூர் பொருளாதாரத்தையும் பாதுகாக்கமுடியும். திருக்குறள் கள்ளுண்ணாமையை வலியுறுத்துகின்றது என்பதை அறிவோம். கள் குடிப்பதை நாமும் ஊக்குவிக்கவில்லை. ஆனால், ஏற்கனவே போதைக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்கவும், தீங்கை மட்டுப்படுத்தவும், கள்ளை இடைக்கால மாற்றாக முன்வைக்கின்றோம். இலவசம் என்பதை மக்கள் மீது திணித்து, "செய்யும் தொழிலே தெய்வம்" (Dignity of Labour) என்னும் உயர் விழுமிய உளவியலைக் குழி தோண்டிப் புதைத்த பெருமையும் திராவிடத்துக்கு உண்டு. இலவசத்தை முற்றாக ஒழித்து, தமிழர் அனைவர்க்கும் தொழில், வணிக, வேலை வாய்ப்புகளை உருவாக்க வலியுறுத்துகிறது.10. 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலைக்குப்பின் நடக்கும் ஒவ்வொரு தேர்தலிலும் தமிழ்த்தேசியத்துக்கு ஆதரவான வாக்குகள் தொடர்ந்து படிப்படியாகக் கூடிவருவது, தமிழ்நாட்டு மக்கள் தமிழ்த்தேசியத்துக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யவேண்டும் என்ற தெளிவான நிலைப்பாட்டை எடுத்துவருவது தெள்ளத்தெளிவாகிறது. எனவே, தமிழ்த்தேசிய எழுச்சியை மடைமாற்ற, இப்பொழுது ஆண்டுகொண்டிருக்கும் தமிழரல்லாத அதிகாரக் கும்பல் பல்வேறு சூழ்ச்சிகளைச் செய்து திரைக்கவர்ச்சி, இலவசங்கள், போதைப் பொருட்கள் என்று மக்களைப் பிரித்து, குழப்பி, தமிழ்த்தேசியத்துக்கு எதிரான மனநிலை இருப்பதாகக் காட்ட முனைகின்றது. வட அமெரிக்கத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த்தேசிய விழுமியங்களை மட்டுமே முன்னிறுத்தி செயலாற்றும் அமைப்பு. எந்தவொரு கட்சியையும் சார்ந்ததன்று. எனினும் தமிழ்நாட்டின் தேர்தல்களில் தமிழ்த்தேசியக் கொள்கையை முழுமையாக ஏற்றுக்கொண்ட அரசியல் கட்சிகளை மட்டுமே தமிழர் அனைவரும் ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில், இப்பொழுது இருக்கும் களச்சூழலைக் கருத்தில் கொண்டு, வருகின்ற 2026 சட்டமன்றப் பொதுத்தேர்தலில் போட்டியிடும் கட்சிகளில் தமிழ்த்தேசியக் கொள்கைகளை முழுமையாக ஏற்றிருக்கும் -- தமிழ்மொழி, தமிழினம், தமிழர் தாயகம், தமிழர் வரலாறு, தமிழீழம் ஆகியவற்றை முதன்மைப்படுத்திச் செயலாற்றிவரும் -- நாம் தமிழர் கட்சிக்கு தமிழர் அனைவரும் வாக்களிக்க வேண்டுகிறோம்.நவ. 18, 2025 - வட அமெரிக்கத் தமிழர் உறவுகளுக்கு அழைப்பு மடல் !
வட அமெரிக்கத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் (North American Thamizh National Association, Inc.) இணைய அன்பான அழைப்பு!தமிழ்த்தேசியக் கொள்கை - புதியதோர் எழுச்சி!அன்பார்ந்த வட அமெரிக்கத் தமிழர்களே, உறவுகளே, வணக்கம் ! அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் வாழும் முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ்ப் பெருந்தகைகள் இணைந்து, நமது தமிழ்த்தேசியம் (Thamizh Nationalism) என்னும் உயரிய கொள்கை கோட்பாடு ஆகியவற்றை முன்னெடுக்கவும் அதன் விழுமியங்களைப் பேணிப் பாதுகாக்கவும், வட அமெரிக்கத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு (North American Thamizh National Association, Inc.) எனும் அமைப்பை நிறுவியுள்ளனர். வட அமெரிக்காவிலும், உலகின் மற்ற பகுதிகளிலும் வாழும் தமிழர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து, தமிழ்த்தேசியத்தின் இன்றியமையாத் தேவையை உணர்த்தி, தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்து வெற்றிபெறச் செய்வது இவ்வமைப்பின் தலையாயக் குறிக்கோள். இவ்வமைப்பை, சுருக்கமாக 'தமிழர் கூட்டமைப்பு' என்று தமிழிலும், NATNA (நேட்னா) என்று ஆங்கிலத்திலும் அழைக்கலாம். இவ்வமைப்பு, இலாப நோக்கமற்ற அமைப்பாக அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வமைப்பின் அனைத்து நிகழ்ச்சிகளும் செயல்பாடுகளும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அனைத்துச் சட்டங்களுக்கும் உட்பட்டு நடைபெறும் என்று உறுதியளிக்கின்றோம். நீண்ட நெடுங்காலமாக, தொடர்ச்சியான நிலப் பகுதியில், ஒரு பொது மொழி, பொதுப் பொருளியல், பொதுப் பண்பாடு, அப்பண்பாட்டில் உருவான உளவியல் உருவாக்கம்,மரபுவழிபட்ட வாழ்க்கை ஆகியவற்றைக் கொண்டு வரலாற்றில் நிலைத்துவிட்ட ஒரு சமூகம் ஒரு தேசமாக அமைகிறது. இந்த வரையறைக்கு ஏற்ப, தமிழ் நாடு, தமிழ் ஈழம் ஆகியவை தேசங்கள் ஆகும். இந்தியாவில் பல தேசிய இனங்கள் உள்ளன. திராவிட நாடு என்பது தேசம் அல்ல; அது கற்பனை ! இந்தியனும் திராவிடனும் இனங்களல்ல; இட்டுக் கட்டப்பட்டவையே!நமது மொழி தமிழ்; நமது இனமும் தமிழ்; தமிழ் நாடு, தமிழ் ஈழம் என இரண்டு தேசங்கள் தமிழர்களுக்கு உள்ளன; இந்த இரண்டு தேசங்களுக்கும் இறையாண்மை உண்டு -- இவை அனைத்தையும் உள்ளடக்கியது தான் தமிழ்த்தேசியம். ஏன் தமிழர் கூட்டமைப்பு? எதற்காக இந்த முன்னெடுப்பு?- தமிழர் அடையாளம், மற்றும் ஒற்றுமை: கல்வி, பண்பாட்டுப் பரிமாற்றம், கூட்டுச்செயல்பாடுகள் வழியாகத் தமிழரின் தனித்துவமான அடையாளம், ஒற்றுமை போன்றவற்றை வட அமெரிக்காவிலும், உலகெங்கிலும் வலிமைப்படுத்துதல்.
- தன்னாட்சி, மற்றும் இறையாண்மைக் கொள்கை: தமிழர்கள் பெருமிதத்துடன் வாழ, தமிழர்களின் தாயகங்களான தமிழ்நாடு தமிழீழம் ஆகியவைகளின் தன்னாட்சி உரிமையையும் இறையாண்மையையும் மீட்டெடுக்கும் அடிப்படைக் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லுதல்.
- இளம் தலைமுறையினருக்கான கல்விப்பணி: புலம்பெயர்ந்து வாழும் நம் தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழரின் வரலாற்றைக் கற்பித்தல். மேலும் அறம், வீரம், மானம், ஒழுக்கம், கொடை, விருந்தோம்பல், உயிர்மநேயம் உள்ளிட்ட உயர் தமிழ் மரபுக் கூறுகளைக் கற்பித்தல்.
- தமிழ்த்தேசிய அரசியல் விழிப்புணர்வு: இளம் தலைமுறைக்குத் தமிழர் இறையாண்மையின் தேவையையும், தமிழர்களுக்குத் தனி அரசு ஏன் இன்றியமையாதது எனும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி, இனப்பற்று, மொழிப்பற்று மிக்க நன்மாந்தர்களாக வளர்த்தெடுத்தல்.
- பண்பாட்டைக் கொண்டாடுதல்: பெருமைமிகு தமிழர் பண்பாட்டைத் தங்குதடையின்றி உலகமெலாம் கொண்டு செல்லுதல்.
வரலாற்றுச் சிறப்புமிக்கத் தொடக்கம்:தமிழ்நாடு நாளான நவம்பர் 01 அன்று, நம் அருமைப் பாட்டன் இராசஇராச சோழன் தோன்றிய திருநாளிலும், இந்த அமைப்பின் தொடக்கவிழா நிகழ்ந்தது, இதன் நோக்கத்திற்கு மேலும் வலிமை சேர்க்கிறது. வாருங்கள்! இணைந்து செயலாற்றுவோம் !அமெரிக்கக் கண்டத்தில் வாழும் தமிழ் உறவுகளாகிய நாம் அனைவரும் குடும்பம் குடும்பமாக, இந்தத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இணைவதன் மூலம், அமைப்பை மேலும் வலிமைப்படுத்தி, ஒற்றுமையுடன் செயல்பட்டு, தமிழர்கள் வளமும் நலமும் பெற உதவ வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். உங்கள் பங்களிப்பு, உங்கள் எண்ணங்கள், உங்கள் செயல்பாடுகள் ஆகியவை மட்டுமே தமிழரின் ஓர் உயிர்த்துடிப்புள்ள எதிர்காலத்தைக் கட்டமைக்க உதவும்.தமிழர் நலன் காக்க இணைந்து கொள்ளுங்கள்!தமிழர் கூட்டமைப்பின் (NATNA) குறிக்கோள், நோக்கம், தொலைநோக்கு போன்ற விரிவான தகவல்கள் அமைப்பின் இணையதளத்தில் ( www.TheNATNA.org ) உள்ளன. அமைப்பில் உறுப்பினராக இணைவதற்கு https://www.thenatna.org/membership இணைப்பைச் சொடுக்கவும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் பெரும் நற்பணியில் இணைந்து செயலாற்ற தங்களின் உறவினர்களையும் நண்பர்களையும் உங்களுடன் அழைத்துவாருங்கள். அன்புடன்,முனைவர் தணி குமார் சேரன், PhD, MBAதலைவர், வட அமெரிக்கத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு