வாசிங்டன், டி.சி. (Washington, DC) - யில் நடைபெற்ற 'நேட்னா' முதல் மாநாடு -- மாபெரும் வெற்றி !
வட அமெரிக்கத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் (North American Thamizh National Association, Inc. -- NATNA) முதல் மாநாடு, அமெரிக்காவின் தலைநகர் வாசிங்டன், டி. சி.- யில் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றது. தமிழ் இன உணர்வாளர்களும், பொதுமக்களும் மிகப்பெரிய அளவில் குடும்பம் குடும்பமாக வந்து கலந்துகொண்டு மாநாட்டைச் சிறப்பித்தனர். கனடாவின் பல பகுதிகளில் இருந்தும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பல பகுதிகளில் இருந்தும் பயணித்து வந்து தமிழ்த்தேசியத்திற்கான தேவையையும், வலிமையையும் பறைசாற்றினார்கள்! தமிழ் நாட்டுத் தமிழர், ஈழத்தமிழர், மலேசியத் தமிழர் என உலகளாவிய தமிழ் உறவுகள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
உலகின் பல நாடுகளில் செயல்படும் தமிழ் அமைப்புகளிடம் இருந்தும் அங்கு வாழும் பல தமிழர்களிடம் இருந்தும் மாநாடு வெற்றி பெற வாழ்த்துச் செய்திகள் வந்தடைந்தன.
ஏப்ரல் 5, 2026, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் குத்து விளக்கு ஏற்றுதல், தமிழ்த்தாய் வாழ்த்து ("வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே ! "), அமெரிக்க ஐக்கிய நாடுகளின் நாட்டுப் பண், தமிழின ஈகியர்க்கு அமைதி அஞ்சலி ஆகியவற்றுடன் மாநாடு தொடங்கிவைக்கப்பட்டது.
மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரும் வட அமெரிக்கத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் செயலாளருமான திரு. இரவி சுப்பிரமணியம் வரவேற்புரை வழங்கினார்.
கூட்டமைப்பின் தலைவர் முனைவர் தணி குமார் சேரன் தலைமையுரை வழங்கினார். வட அமெரிக்கத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு (தமிழர் கூட்டமைப்பு) ஏன் தொடங்கப்பட்டது, அதன் நோக்கங்கள் யாவை, தமிழ்த்தேசியத்தின் தேவைகள் எவை என்பன பற்றி விளக்கி விரிவான உரையை ஆற்றினார்.
பின்னர், வரும் சூலை திங்கள் நியூ செர்சி (New Jersey) மாநிலத்தில் நடைபெற உள்ள வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை ஆண்டு விழாவின் ஒருங்கிணைப்பாளர்கள் திரு. சசிகுமார் ரங்கநாதன், திரு. செந்தில் வாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கியதுடன், பேரவையின் ஆண்டு விழாவிற்கு அனைவரும் வந்து சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத்தனர்.வர்சீனியா (Virginia) தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு. சோதி முருகன், அமெரிக்கத் தமிழர் செயற்குழுவின் தலைவர் திரு. பாலன் குகபாலன், இலங்கைத் தமிழ்ச்சங்கத்தின் தலைவி திருமதி இந்திரா இம்மானுவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் நடவடிக்கைக் குழுவின் செயற்குழு உறுப்பினர் முனைவர் முருகையா முரளிதரன், தம் அமைப்பின் செயல்பாடுகள் குறித்து விளக்கியதுடன், வட அமெரிக்கத் தமிழர் கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் உறுதியளித்தார்.